பிறந்த நாளில் அம்மாவை சந்திக்கவில்லை... உங்களை சந்திக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்

மத்தியபிரதேசம்: இன்று நான் எனது தாயாரை காண செல்லவில்லை. ஆனால், லட்சக்கணக்கான மத்தியப் பிரதேச மகளிரை சந்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர ோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். குஜராத் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்துவந்த நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை அளித்தார்.


கடந்த 2014இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் பிரதமர் மோடி. அப்போது முதல் தற்போது வரை பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். இவருடைய பிறந்த நாள் இன்று. இவர் கடந்த 1950 ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார்.

சிறுத்தை இனம் 1952 ம் ஆண்டுடன் இந்தியாவில் அழந்துவிட்டது. தற்போது நமிபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 8 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பிறந்த நாளான இன்று வழக்கமாக எனது தாயார் ஹீராபென் மோடியை சந்திக்க நான் செல்வேன். அவரை பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வேன். ஆனால், இன்று நான் எனது தாயாரை காண செல்லவில்லை. ஆனால், லட்சக்கணக்கான மத்தியப் பிரதேச மகளிரை சந்திக்கிறேன். நீங்கள் (ம.பி. பெண்கள்) என்னை ஆசிர்வதியுங்கள். கடந்த நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் பெண்கள் சாதிப்பதில் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் முதல் குடியரசுத் தலைவர் வரை பெண்கள் தான் இந்த நூற்றாண்டில் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க பல புதிய வழிகளை உருவாக்க நமது அரசு பணிகளை செய்து வருகிறது.

“ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு” மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய சந்தையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவாக பல்வேறு பணிகளை கடந்த 8 ஆண்டுகளாக செய்து வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.