கொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு 2 கோடி முக கவசங்கள் வினியோகம் - மத்திய அரசு

உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புடையே முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் இந்த வார தொடக்கம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 6.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நபர்கள் வென்டிலேட்டர்களின் கீழ் வைத்து சிகிச்சை அளிக்க ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதுவரை 11 ஆயிரத்து 300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 1 லட்சத்து 2 ஆயிரம் சிலிண்டர்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக துணிச்சலாக போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், சார்பு மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு கவச உடைகளையும், கருவிகளையும், என்-95 முக கவசங்களையும் வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

தற்போது,நாடு முழுவதும் 2 கோடியே 2 லட்சம் என்-95 முக கவசங்களும், 1 கோடியே 18 லட்சம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 39 ஆயிரம் சுய பாதுகாப்பு கவச உடைகளும், கருவிகளும், 9 லட்சத்து 81 ஆயிரம் என்-95 முக கவசங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.