ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் ரூ.1000 நிவாரண உதவி விநியோகம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 59 ஆயிரத்து 377 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது.

எனவே, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடை பணியாளர்கள் மூலமாக, குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

அதனால், இன்று முதல் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேசன் கடைகள் செயல்படாது என்றும், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள், வரும் 27 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.