இலவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29-ம் தேதி விநியோகம் - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத்துடன், அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதன்பின்னர் மே மாதத்தில் உணவுப்பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பப்பட்டன. ஜூன் மாதமும் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய தினமும் குறிப்பிட்ட அளவு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன்படி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29-ம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டோக்கன் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கலாம்.