தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறுபடியும் உடல் நிலை சரியில்லாததால் கடந்த 6ந்தேதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின்னர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.