ஒரு சில சம்பவத்தை வைத்து அரசை குறை கூறாதீர்கள்...முதல்வர் காட்டம்

ஒரு சில சம்பவத்தை மட்டும் வைத்து அரசை குறை கூறாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்த பின் முதல் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொரோனா தடுப்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் முகாம் நடத்தியதன் விளைவாக, கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விழாவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் தடுக்கவில்லை. கொரோனா பரிசோதனை செய்யாதவர்களை அரசு விழாவில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. பரிசோதனை செய்து கொண்டு நெகட்டிவ் என்றால் யார் வேண்டுமானாலும் அரசு விழவாவுக்கு வரலாம். எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதிலை அளித்து விட்டார்.

மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என்பது அமைச்சரின் கருத்து. அரசின் கருத்தல்ல. ஒரு மாவட்டத்தில் இருந்து ஒரு மாவட்டம் செல்பவர்களை இ பாஸ் முறை இருந்தால்தானே கண்டறிய முடியும். ஒரு சில சம்பவத்தை வைத்து அரசை குறை கூறாதீர்கள். திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சரே வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.