ஆடிக்கிருத்திகை உற்சவத்திற்கு வரவேண்டாம்; கோயில் நிர்வாகம் வேண்டுகோள்

பக்தர்கள் யாரும் ஆடிக்கிருத்திகை உற்சவத்திற்கு வரவேண்டாம் என்று ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி குமாரசுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காளஹஸ்தியில் உள்ள குமார சுவாமி (முருகன்) கோயிலில் நடக்கும் ஆடிக் கிருத்திகை உற்சவம் மிகவும் பிரபலமானது. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் இந்த உற்சவத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என காளஹஸ்தி கோயில் நிா்வாகம் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்கு உள்பட்ட விஞ்ஞானகிரி குமார சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, காா்த்திகை கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாள்களில் உற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நாட்களில் பக்தா்கள் காவடி எடுத்துக் கொண்டு மஞ்சள் சட்டை அணிந்தபடி நெற்றியில் விபூதி பூசி 'அரோகரா' கோஷத்துடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவா்.

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வரும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இம்மாதம் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள உற்சவத்தை தனிமையில் நடத்த காளஹஸ்தி கோயில் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

எனவே, பக்தா்கள் தயவு செய்து காவடி எடுத்து கோயிலுக்கு வரவேண்டாம் என நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.