உள்நாட்டு வர்த்தகம் 9 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது... பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு... நமது உள்நாட்டு வர்த்தகம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 3 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர். அகௌரா - அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு, குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை, மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு - II ஆகிய மூன்று திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 6.78 கி.மீ இரட்டை ரயில் பாதை மற்றும் திரிபுராவில் 5.46 கி.மீ இரட்டை ரயில் பாதையுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் இணைப்பின் மொத்த நீளம் 12.24 கி.மீ ஆகும்.

குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதைத் திட்டம் இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.

1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதி திட்டத்தின் கீழ் மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையம் ஆகும். இந்தியாவின் என்.டி.பி.சி லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம்-இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம் இடையேயான நட்பின் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நான் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், நமது உள்நாட்டு வர்த்தகம் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.