தஞ்சாவூரில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் நன்கொடை வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாசிக்கப்பட்ட புத்தகத்தை தானம் செய்வோம் புது உலகை படைப்போம் என்னும் பெட்டகத்தில் நன்கொடையாக புத்தகதை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் புத்தகத் திருவிழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறைவாசிகளுக்காக புத்தக தானம் செய்வோம் சமூக சீர் திருத்தத்தில் பங்கு கொள்வோம் என்கிற வாசகத்துடன் சிறைத் துறை சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ஏராளமான புத்தகங்களை தானம் செய்கின்றனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்துடன் வந்து புத்தகங்களை அந்த பெட்டகத்தில் கொடையாக வழங்கினார். இந்நிலையில், சிறைச்சாலையிலுள்ள நூலகங்களுக்கு பொது மக்களிடமிருந்து புத்தக தானம் பெறும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் போது தொடங்கி வைத்தார்.

இதன்படி, தஞ்சாவூரில் தொடங்கி நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் சிறைவாசிகளுக்காக புத்தக தானம் பெறப்படுகிறது. இதில், முதல் நாளான ஜூலை 14ம் தேதி 103 புத்தகங்களும், 2வது நாளான 15 ம் தேதி 385 புத்தகங்களும், 3ம் நாளான 16ம் தேதி 400கும் மேற்பட்ட புத்தகங்களும், 4ம் நாளில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களும் பொதுமக்கள் தானம் செய்தனர்.

இதில், மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, அப்துல் கலாம், திருக்குறள், தன்னம்பிக்கை நூல்கள் போன்றவை அதிகளவில் வருகின்றன. இந்தப் புத்தகங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய இடங்களிலுள்ள கிளைச் சிறைகளுக்கு பிரித்து வழங்கப்படும். அதிக அளவில் புத்தகங்கள் வந்தால். மற்ற மாவட்டங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.