வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்; அறநிலையத்துறை அறிவிப்பு

தமிழக கோவில்களில் ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

ஊடரங்கு காரணமாக கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக பிரசித்தி பெற்ற கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை, 'ஆன்-லைன்' வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், மது பிரியர்களுக்காக, டாஸ்மாக் கடைகள் திறக்க, அரசு அனுமதி அளித்தது போன்று, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. வரும், ஜூன், 1ல் இருந்து, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்ததாக, சமூக ஊடங்களில், செய்தி வெளியானது. இதை, அறநிலையத்துறை வட்டாரங்கள், திட்டவட்டமாக மறுத்துள்ளது.

'மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். எனவே, புரளிகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்; தவறான தகவல் வெளியிடும் சமூக ஊடங்கங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.