ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ.,யை தாக்கிய போதை சிறுவர்கள்

சென்னை: எஸ்.ஐ., தாக்கிய போதை சிறுவர்கள்... சென்னை தண்டையார்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை, கஞ்சா போதையில் தாக்கிய 5 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரியும் பாலமுருகன் என்பவர், நேற்றிரவு மஃப்டியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 5 சிறுவர்களை பிடித்து விசாரித்த போது, கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களுள் ஒருவன் காவலரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

அந்த சிறுவனின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து அவனை பாலமுருகன் கீழே உட்கார வைத்த போது, அவனும் மற்ற சிறுவர்களும் சேர்ந்து உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதில் முகம் முழுவதும் வீக்கமடைந்து கை, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு 5 சிறுவர்களையும் பிடித்தனர்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதால் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.