நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ட்விட் போட்ட நெதர்லாந்து அரசியல்வாதி

சென்னை: பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா சர்ச்சைக்குள்ளான நிலையில் அவருக்கு உலக நாடுகளின் கண்டனங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஓர் அரசியல்வாதி நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நுபுர் ஷர்மாவே, ‘அந்த தொலைக்காட்சி விவாதத்தில் சிவலிங்கத்தை சிலர் அவமதித்ததை அடுத்து நான் அவ்வாறு பேசிவிட்டேன். எனது கருத்தை நான் முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறிய நிலையில், நுபுர் ஷர்மா சொன்ன கருத்துக்கு தான் ஆதரவளிப்பதாக நெதர்லாந்து நாட்டு அரசியல்வாதி கீர்ட் வில்டர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “நுபுர் ஷர்மா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்,. அவருக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும். இந்தியா மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியர்கள் நுபுர் ஷர்மாவுக்கு துணை நிற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் கீர்ட் வில்டர்ஸ். இதுவும் தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் அவர், இஸ்லாமிய நாடுகளிடம் ஜனநாயகம் இல்லை, சட்டத்தின் ஆட்சி இல்லை, சுதந்திரம் இல்லை. அவர்கள் சிறுபான்மையினரை துன்புறுத்துகிறார்கள் மற்றும் வேறு யாரையும் போல மனித உரிமைகளை மதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

”நான் நுபுர் ஷர்மாவை ஆதரிப்பதால் எனக்கு முஸ்லிம்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் எனது பதில் ஒன்றுதான், நீங்கள் எல்லாம் நரகத்துக்குதான் செல்வீர்கள். நாங்கள் உண்மைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் நிற்கிறோம்” என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கீர்ட் வில்டர்ஸ்.

இவர் நெதர்லாந்து நாட்டின் வலது சாரி கட்சியான சுதந்திர கட்சி தலைவராக இருப்பவர். நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான இந்த கட்சியின் பிரதிநிதிகள் அவையின் தலைவராக 1998 ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறார். இவர் தொடர்ச்சியாக இஸ்லாம் மதம் மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருப்பவர் என்று அவரைப் பற்றி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்த கீர்ட் வில்டர்ஸ் ஒரு கட்டத்தில் தன்னை கடவுளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒரு அஞ்ஞானவாதியாக அறிவித்துக் கொண்டவர். அதேநேரம் நெதர்லாந்து நாட்டை இஸ்லாமியமயமாக்கும் செயல்பாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறவர். இந்த பின்புலத்தில் இருந்துதான் அவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.