விசாரணை நீதிமன்றங்களின் கடமை... உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்... 'வழக்கின் விசாரணையை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் பார்த்துக் கொள்வது, விசாரணை நீதிமன்றங்களின் கடமை' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்துாரில் மேயராக இருந்தவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தப்பிக்க உதவி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏழு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ஆனால், இவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து அவர், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று (ஆக.19) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகளாகியும், கைது செய்யப்பட்ட நபரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. விசாரணையை தாமதிப்பது, பல பிரச்னைக்கு வழிவகுத்து விடும். எந்த ஒரு வழக்கின் விசாரணையையும் நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது விசாரணை நீதிமன்றங்களின் கடமை.

இந்த வழக்கில் ஒரு ஆண்டு காலத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படுவதை விசாரணை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் இருந்த காலத்தை கருதி, அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.