இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் மாநாடு: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு மட்டுமின்றி பொருளாதார இழப்பும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மீட்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக இன்று மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் சி.ஐ.ஐ. தலைவர் ஹரி மு.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் ஆர்.தினேஷ், பி.சந்தானம், ‘அப்போலோ’ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, ‘சன்மார்’ குழுமத்தின் துணை தலைவர் விஜய் சங்கர், ‘வீல்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம், ‘டைம்லர்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சத்யகம் ஆர்யா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.