மும்பையில் 3 மாதங்களுக்கு பின் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியாக இருப்பது புறநகர் மின்சார ரெயில் சேவை ஆகும். தினசரி சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துவர். ஆனால் தற்போது காரணமாக மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மின்சார ரெயில் சேவை இயக்கப்படவில்லை.

தற்போது மும்பையில் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பின், மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் மின்சார ரெயில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளன. அதன்படி, இன்று 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதிகாலை 5.30 மணிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் விராரில் இருந்து சர்ச்கேட்டிற்கு முதல் ரெயில் புறப்பட்டு சென்றது. விரார்- தகானு இடையே 16 மின்சார ரெயில் சேவைகள் உள்பட மொத்தம் 146 சேவைகளை இயக்க மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டுமே இந்த மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களது அடையாள அட்டைகள் மூலமாக ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காக 1,200 பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய மின்சார ரெயில்களில் 700 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மும்பையில் 1 லட்சத்து 25 ஆயிரம் அத்தியாவசிய பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.