பருவமழை காலத்தில் தடையின்றி மின்விநியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு தாழ்வழுத்த, உயரழுத்த பிரிவுகளில் 3.34 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். இதனை அடுத்து இவர்களுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. மழை காலத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்விநியோகம் செய்ய மின்வாரியம் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது.

எனவே அதன்படி, தாழ்வான பகுதிகளில் உள்ள பில்லர் பாக்ஸ்கள் உயர்த்தி அமைக்கப்படுகின்றன. மின்வழித்தட ஃபீடர்களில் பழுதுஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த மின்மாற்றிகள், மின்கம்பங்கள், சேதமடைந்த மின்வயர்கள், தரைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மின்சார கேபிள்கள் போன்றவற்றை மாற்றி புதியவை பொருத்தப்படுகின்றன.

மேலும் தேவையான அளவு மின்மாற்றிகள், மீட்டர்கள், ஃபியூஸ் வயர்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கையிருப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மழைநீர் புகுந்து மின்சாரம் விநியோகத்தில் தடை ஏற்படுவதை தடுக்க, துணைமின் நிலைய வளாகங்களில் மணல்மூட்டைகளை அடுக்கி வைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.