தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் மின்கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் மின் இணைப்புகளை துண்டிக்க மின்வாரியம் உத்தரவு

சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு 1 முறையும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மாதம் 1 முறையும் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளில் மின்சாரப் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் மின் நுகர்வோர் கட்டணம் செலுத்தாமல் ரூ.47 கோடி பாக்கி வைத்து உள்ளனர். கடந்த ஜுலை மாத நிலவரப்படி அதிகபட்சமாக கோவை வட்டத்தில் 3,823 நுகர்வோர் ரூ.21.13 கோடியும், 2-வதாக காஞ்சிபுரம் வட்டத்தில் 24 ஆயிரம் நுகர்வோர் ரூ.11.86 கோடியும் பாக்கி வைத்து உள்ளனர். இதையடுத்து மின்கட்டண பாக்கியை செலுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியும், நுகர்வோர் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.


இதனை அடுத்து, மின்வாரியத் தலைவர் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மின்கட்டண பாக்கி வைத்துள்ள நுகர்வோரிடம் மின் கட்டணத்தை வசூலிக்குமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியத் தலைவர் வலியுறுத்திவுள்ளார்.

மேலும், 2 ஆண்டுகளுக்கு மேல் மின்கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்து உள்ள நுகர்வோரின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அதேபோன்று மின்திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பொறியாளர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.