அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு பிறகே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். இதற்காக தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு திட்டத்தின்படி அனுமதி வழங்கவும் தயார் என்று அரசு அறிவித்தது.

அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டை அங்கீகரிப்பதற்கு குறைந்தது 2 மாத பாதுகாப்பு தரவுகளை வழங்கும்படி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், தடுப்பூசியை உருவாக்கும் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை எனவும், தேர்தலுக்கு பிறகே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசியை கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.