கோவை பாஜக தலைமையகத்தில் குவிந்த தொண்டர்களால் பரபரப்பு

கோவையில் குவிந்த பாஜக தொண்டர்கள்... வேல் யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலகட்டத்தில் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் வேல் யாத்திரைக்கு புறப்பட்டனர். பாஜக தலைவர் கைது செய்யப்பட்டால் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதலே சித்தாபுதூரில் உள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். இந்த சூழலில் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் நடந்த வேல் யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து கட்சித் தலைவரின் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று கூறி பாஜக.,வினர் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் திருத்தணியில் பாஜக தலைவர் முருகன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து மீண்டும் தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.