பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு... லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளதாக பெய்ரூட்டின் ஆளுநர் மர்வான் அபாட் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை உலகையே உலுக்கிய இந்த வெடிப்பு சம்பவத்தினால், 6,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும், 300,000பேர் தங்கள் வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அவர்களில் பலர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனவும் ஆளுநர் மர்வான் அபாட் தெரிவித்தார்.

லெபனான் தலைநகரில் வசிப்பவர்களில் கால் மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்க தகுதியற்ற வீடுகளுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. 6,200 கட்டடங்கள் சேதமடைந்ததாக மதிப்பீடுகள் உள்ளன. மிகப்பெரிய வெடிப்புகள் அந்த இடத்தில் 43 மீட்டர் ஆழமான பள்ளத்தை விட்டுச் சென்றதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பெயிரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பேரழிவு வெடிப்பை மேற்கோளிட்டு லெபனான் நீதி அமைச்சர் மேரி கிளாட் நஜ்ம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் மீதமுள்ள அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு அமைச்சர்களும் இதுவரை பதவியில் இருந்து விலகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று கணக்கிட்டுள்ளது.