சிதம்பரம் தீட்சதர்களை கைது செய்ய தடை நீட்டிப்பு

சென்னை : கைது செய்ய தடை நீட்டிப்பு... குழந்தை திருமணங்கள் செய்து வைத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் சிதம்பரம் தீட்சிதர்கள் பலர் மீது சிதம்பரம் அனைத்துமகளிர் போலீஸார் 2 வழக்குகளும், சிதம்பரம் டவுன் போலீஸார் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குழந்தை திருமணம்செய்து வைத்த தீட்சிதர்கள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதை கண்டித்து தீட்சிதர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அதுதொடர்பாக சிதம்பரம் டவுன் போலீஸார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்த 4 வழக்குகளிலும் போலீஸார் தங்களை தேடிவருவதாகக்கூறி சிதம்பரம் கண்ணன் தீட்சிதர் உள்பட 52 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அவர்களை நவ.1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என தடை விதித்து போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக ஆஜராகி தீட்சிதர்களை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென கோரினார்.


அதேபோல போலீஸ் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம்பெற மேலும் 2 வாரம் அவகாசம் தேவை எனக் கூறப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரர்களான இந்த 52 பேரையும் கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.