கொரோனா பரவல் உயர்வு .. தியேட்டர் மற்றும் குளிர்சாதன அரங்கங்களில் முகக்கவசம் கட்டாயம்

சென்னை: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் .. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. அதனால் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 1-ம் தேதி முதல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்,பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வருகைபுரியும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது, தியேட்டர் மற்றும் குளிர்சாதன அரங்கங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர், தமிழகத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ளும்படியான கொரோனா தொற்று பரவல் இல்லை எனவும் , இதனால் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர் மற்றும் குளிர்சாதன அரங்கங்கள் மற்றும் கலை அரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.