முக கவசம் கட்டாயம்.. மிரள வைக்கும் கொரோனா..

சென்னை: சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காததுதான்.

தமிழகத்தில் இத்தனை நாட்களாக 1000 க்குள் இருந்த கொரோனா கேஸ் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் 2,662 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 5ஆவது நாளாக 1060 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதாவது வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவற்றில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஒரு வேளை அணியாவிட்டால் அவர்களிடமிருந்து ரூ 500 அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது