பொய்யான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம்

சென்னை: தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையான நேற்றுடன் சேர்த்து மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 244.08 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக செய்திகள் வெளியாகின. நேற்று மட்டும் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.87 கோடிக்கும், சேலம் மாவட்டத்தில் ரூ.49.21 கோடிக்கும், சென்னையில் ரூ.48.80 கோடிக்கும், திருச்சியில் ரூ.47.78 கோடிக்கும், கோவையில் ரூ.45.42 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசு நிறுவனங்களின் மீது பொய்யான பிம்பத்தை உருவாக்கும் வகையில், எதார்த்தம் தெரியாமல், குறைந்தபட்ச தர்மம் கூட இல்லாமல் டெலிவ்டோ செயல்படுவது தவறு. டாஸ்மாக் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.