நடு ரோட்டில் பருத்தியை கொட்டி விவசாயிகள் போ

தமிழ்நாடு: சிதம்பரம் சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் பருத்தியை சாலையில் கொட்டி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே 200க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் பருத்தியை சாலையில் கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சீர்காழி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

கடந்த வாரம் பருத்தி குவிண்டால் ரூபாய் 12,000 விற்றதாகவும், தற்பொழுது இந்த வாரம் ரூ. 4000 வரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எடுத்துக் கொள்கின்றனர் எனவும், இதனால் பயிரிட்ட செலவு தொகை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உயர் அதிகாரியிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள், திடீரென தாங்கள் கொண்டு வந்த பருத்தியை சாலையில் பிரித்து கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலால் சிதம்பரம் மற்றும் சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விளக்கி கொள்ளப்பட்டது.