கரும்பு வழங்கியதற்கு பணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை: அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.21 கோடி பணம் வழங்காததை கண்டித்து ஆலை முன்பாக விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சரக்கரை ஆலை முன்பாக, தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு 2021-2022ம் ஆண்டு பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.21 கோடி பணம் பாக்கி உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும். கரும்புக்கு பணம் வராததால், மறுதாம்புக்கான வங்கி கடன் வழங்க வங்கி நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு வழிவகை கடன் தொகையை தமிழக அரசு அதிகளவு வழங்க வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்குவதாக அறிவித்தை உடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பொருளாளர் அர்ச்சுணன், துணை செயலாளர் அய்யாதுரை, துணை பொருளாளர் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.