ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரங்கள் உதவியை நாடும் விவசாயிகள்

கரூர்: ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரங்கள் மூலம் நடவுப்பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.


விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் கரூர் அருகே இயந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் குருவை சாகுபடி விட, சம்பா சாகுபடியில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.


நடப்பு ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை மற்றும் அமராவதி அணைகளின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் அவுரி செடி பயிரிடப்பட்ட நிலங்களில் அதை தழை சத்தாக மாற்றி, மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் உழவு செய்து நெல் பயிரிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. நெல் அறுவடை செய்ய ஆள் இல்லாததால், இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தால், நெல் மற்றும் மற்ற பயிர்கள் வீணாகி கொண்டிருக்கின்றன.


ஆகையால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால்,100 நாள் வேலை திட்டத்தை கிராம பஞ்சாயத்துகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கடந்த மாதம் கரூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் நவீன இயந்திரங்கள் மூலம் நேரடியாக நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்