கடுமையான குளிர் வாட்டியும் மன உறுதியில் எவ்வித மாற்றமும் இல்லாத விவசாயிகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்த விவசாயிகளின் போராட்டம் நேற்று 24-வது நாளை எட்டியது.

இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறை போன்றவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு அளித்து வரும் உறுதிமொழிகளை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அரசுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், விவசாயிகள் போராட்டத்தில் தலையிட மறுத்து விட்டது. போராடுவது அவர்களது உரிமை எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் மிகவும் குளிரான நாளாக நேற்று அறியப்பட்டுள்ளது. சராசரி வெப்பநிலை 3.9 செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. நகரின் சில பகுதிகளில் 3.3 மற்றும் 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தால் எல்லைப்புற சாலைகளில் போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. அந்தவகையில் காஜிப்பூர் வழியாக நொய்டா, காஜியாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. அந்த சாலையை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.