அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 44 சதவீதம் நிறைவு பெற்றது

2021ல் நிறைவடையும்... அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 44 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பணிகள், இரவு பகலாக நடப்பதால், திட்டமிட்டபடி, 2021 டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் என்பது, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், அரை நுாற்றாண்டு கடந்த கனவு திட்டம். பல போராட்டத்துக்கு பின், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் பணி நடந்து வருகிறது. மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட அவிநாசி, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, காங்கயம், கோபி செட்டிபாளையம், பவானிசாகர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம் என, 9 சட்டசபை தொகுதிக்குட்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காளிங்கராயன், நல்லகவுண்டம்பாளையம், போலநாயக்கன்பாளையம், திருவாச்சி, எம்மாம்பூண்டி, அன்னுார் என, ஆறு இடங்களில், நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 1,060 கி.மீ.,க்கு குழாய் பதிக்கும் பணியும் துவங்கி நடந்து வருகிறது. இப்பணியின் மூலம், 1,045 குளம், குட்டையில் தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால், சில மாதம் பணி நிறுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வந்துள்ளனர். உரிய மருத்துவ பரிசோதனை, தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகுதான், அவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில், ''அத்திக்கடவு திட்டப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. புனே, சென்னை, பெருந்துறை உள்ளிட்ட இடங்களில், குழாய் தயாரிப்பு பணி வேகமெடுத்துள்ளது. தலைமுறை தாண்டி நிற்கும் திட்டம் என்பதால், மிகவும் கவனமுடன் பணி நடந்து வருகிறது. இதுவரை, 44 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன,'' என்றார்.