அசாம் மாநிலத்தில் எண்ணெய் வயலில் தீ விபத்து

அசாமில் உள்ள தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமாக எண்ணெய் வயல் உள்ளது. இதில் கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த எண்ணெய் வயல் நிபுணர்கள், நேற்று இந்த எண்ணெய் வயலை பார்வையிட்டனர். அதன்பின், எரிவாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

எரிவாயு கசிவை சரி செய்து கொண்டிருக்கும்போது, பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எரிவாயு கசிவை சரி செய்து கொண்டிருந்தவர்கள் வயலில் இருந்து உடனே வெளியேறினர். பின்னர் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. இதனால் அப்பகுதியை சுற்றி வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் பல்வேறு வீடுகள் தீயில் கருகி நாசமாகின.

இந்த தீ விபத்தில் இதுவரை 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஓஎன்ஜிசியின் ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்துள்ளார். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த எரிவாயுக் கசிவை சரி செய்ய மத்திய அரசுக்கு அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த எண்ணெய் வயல் தீ விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட்டு வருகின்றனர்.

தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்ணெய் வயல் உள்ளது. இந்த எண்ணெய் வயலுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில், திப்ரு சைகோவா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் உயிரின பாதுகாப்பு பூங்காக்கள் அமைந்துள்ளன. இதனால் பூங்காக்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் எழுந்துள்ளது. மேலும் இந்த எரிவாயுவின் பாதிப்பு அருகிலுள்ள வயல் வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.