முன் சக்கரம் இயங்காததால் நெருப்பு பொறி பறந்தது...அச்சப்பட்ட ரையார் ஏர் விமான பயணிகள்

டப்ளின்: இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து வந்த ரையான் ஏர் விமானத்தின் முன்சக்கரம் இயங்காததால் நெருப்புப் பொறி பறக்க அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

லிவர்பூல் நகரில் இருந்து அயர்லாந்தின் டப்ளின் நகருக்கு ரையான் விமானம் புறப்பட்டுச் சென்றது. டப்ளின் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் முன்சக்கரங்கள் இயங்காதது தெரியவந்தது. ஆனாலும் விமானி விமானத்தை அவசரமாகத் தரை இறக்கினார். இதனால், நெருப்புப் பொறி பறக்க ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானம் நிறுத்தப்பட்ட பிறகு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனால் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் விமானத்தை நோக்கிச் சென்றன.

பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.