புயல் எதிரொலியால் குமரியில் 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று பத்து நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து வருவது வழக்கம். கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்புவார்கள். சிலர் மாலையில் கடலுக்கு சென்று காலையில் கரை திரும்புவதும் உண்டு. இந்நிலையில் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புரெவி புயலாக வலுப்பெற்றுள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து குளச்சல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளையும், மீன்பிடி வலை போன்ற உபகரணங்களையும் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆழ்கடலுக்கு சென்றிருந்த விசைப்படகு மீனவர்கள் அவசரம், அவசரமாக கரை திரும்பினர். அவர்களும் தங்களது படகுகளை துறைமுகம் பகுதியில் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர்.

இதனால், குளச்சல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கட்டுமரம் உள்பட அனைத்து வகை படகுகளும் ஓய்வெடுத்த வண்ணம் உள்ளன. மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமான மீனவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலக்கூடத்திற்கு சுமந்து செல்லுதல், படகுகளில் ஐஸ் கட்டி ஏற்றுதல் போன்ற தொழிலில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களும் கடந்த நான்கு நாட்களாக வேலை இழந்துள்ளனர்.

தூத்தூர் மண்டலத்தில் கொல்லங்கோடு, தூத்தூர், நித்திரவிளை, இரவிபுத்தன்துறை போன்ற மீனவ கிராமங்களில் 850-க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், 2,400-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடித்து வருகின்றன. இந்த படகுகள் அனைத்தும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து வருகின்றன. இந்த படகுகள் அனைத்தும் புரெவி புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.