அணை திறப்பு காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடனாநதி அணையின் நீர்திறப்பு காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால், இவ்விரு அணைகளில் இருந்தும் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது.

அதேநேரம், தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து நொடிக்கு 10,000 கன அடிக்கு மேல் தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனுடன் மழைநீரும் கலப்பதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லை நகர் பகுதியில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு, கடனாநதி அணையின் நீர்திறப்பும், ஆங்காங்கே கலக்கும் மழைநீருமே காரணம் என்றார்.

தற்போது வரை மாவட்டத்தில் எவ்வித வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை எனவும், ஆற்றில் இறங்கி குளிக்கவும், கரையில் நின்று செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.