பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளம்… மக்கள் தவிப்பு

பாகிஸ்தான்: கனமழையால் மக்கள் அவதி... பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நேற்று ஒரே நாளில் 25 சிறுவர்கள் உட்பட 57 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையால் பாகிஸ்தானில் முழு கட்டிடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

பல மேம்பாலங்கள் இடிந்து தரைமட்டமாயின. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மக்கள் தங்க இடமின்றி, உணவின்றி பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

சிந்து மாகாணத்தில், பொதுமக்கள் படகுகள் மூலமே வெளியேற வேண்டி இருக்கிறது. படகில் செல்ல ஒரு நபருக்கு 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, வெள்ளத்தால் நேற்று ஒரே நாளில் 25 சிறுவர்கள் உட்பட 57 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 441 சிறுவர்கள் உட்பட 1,265 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.