ஒரே இடத்தில் கூடி நிவாரணம் கோரி வாத்தியங்கள் இசைத்த நாட்டுப்புற கலைஞர்கள்

கொரேனோ ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர, மேளம், தப்பாட்ட கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க கோரி ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் திரண்டு வாத்தியங்களை வாசித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம் என ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை என்பதால் நாட்டுப்புறகலைஞர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டுப்புறக்கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. மற்ற துறைகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஒருவேளை உணவிற்கே கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய குடும்பம் உள்ளது.

நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கடலையூர் சாலையில் ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரக் கலைஞர் மாரியப்பன் தலைமையில் தங்கள் வாத்தியங்களை வாசித்து நூதன முறையில் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்தனர்

அரசு நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதே போன்று பல நகரங்களிலும் நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்று கூடி இசை வாத்தியங்களை வாசித்தனர்.