பொங்கல் பண்டிகை ... பயணிகளின் வசதிக்காக, நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை :நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் ..... தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை மற்றும் பிறநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களில், சொந்தபந்தங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர்.

எனவே இதனையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து துறை சார்பில் நாளை முதல் 14-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் ,சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதனை அடுத்து நாளை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 651 பேருந்துகளும், பிறநகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும், இதே போன்று 13 -ம் தேதி வழக்கமான பேருந்துகளுடன் சென்னையிலிருந்து 1,805 சிறப்பு பேருந்துகளும், மற்ற நகரங்களில் இருந்து 2,214 பேருந்துகளும் , அதேபோல் 14-ம் தேதி சென்னையில் இருந்து 1,943 சிறப்பு பேருந்துகளும் , மற்ற இடங்களில் இருந்து 2,461 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றது.

மேலும் சென்னையில் கோயம்பேடு, கே கே நகர், மாதவரம், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாணவர்கள் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 12 முன்பதிவு மையங்களும், tnstc செயலி மற்றும் www.tnstc.in என்கிற இணையதளம் ஆகியவற்றின் மூலமாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் 1.5 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.