திறன்மிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் படையெடுக்கின்றன

சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் வருகை... படித்த, திறன்மிக்க இளைஞர்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளனர் என்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்துக்கான அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்துறை மேம்பாட்டுக்காக அரசு எடுத்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ள நிதிநுட்ப நகரம் டிட்கோ நிறுவனத்தால் 116 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. அந்நகரம் நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும்.

அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

இதன் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் என்று அரசு கூறியுள்ளது. நிதிநுட்ப நகர திட்டத்தின் ஒரு பகுதியாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டடமும் கட்டப்படவுள்ளது.

நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் அதில் அமைக்கப்படும்.