பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மிர் ஜபருல்லாகான் ஜமாலி, பர்வேஸ் முஷரப் அதிபராக இருந்தபோது, 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி தொடங்கி 2004-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி வரை பிரதமர் பதவி வகித்தார். இவர் மாரடைப்பு காரணமாக ராவல்பிண்டி ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இவர், அந்த மாகாணத்தில் இருந்து பிரதமர் பதவிக்கு உயர்ந்தவர் இவர் மட்டும்தான். 2013 நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். சுப்ரீம் கோர்ட்டால் நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோதிலும், கடசித்தலைவர் பதவியை ஏற்க அனுமதிக்கும் மசோதா குறித்த கட்சியின் கொள்கைக்கு இணங்கி வாக்களிக்க இவர் மறுத்து விட்டார். நீதித்துறைக்கு எதிரான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி கொள்கைகளை எதிர்த்தார்.

2018-ல் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்தவர் ஆவார். இவரது மறைவுக்கு பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.