வேலைவாய்ப்புகள் தருவதாக வரும் மோசடி; கவனமாக இருக்க எச்சரிக்கை

வேலை வாய்ப்புகளை தருவதாக ஆன்லைன் மூலம் மோசடிகள் நடந்து வருகிறது. எனவே வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை நம்பி ஏமாந்து விடவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பலரும் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை தருவதாக ஆன்லைன் மூலம் மோசடிகள் நடந்து வருகிறது.

இந்த மாதிரி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடி மூலம் வேலை இழந்தவர்கள் வீட்டிலிருந்தே தினமும் 200 முதல் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் இப்போதே இணைந்தால் 50 ரூபாய் போனாஸ் எனவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் இணைக்கப்படுகிறது .

அதன் கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்வதன் மூலம் நமது தரவு, தொடர்புகள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, வாட்ஸ்அப் சாட்டிங், சமூக வலைதள விபரங்களையும் ஹேக் செய்யும் நிலை உருவாகி விடும்.

ஆன்லைன் மோசடிக்கு எதிராக வாட்ஸ்அப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வந்த போதிலும் இம்மாதிரியான மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதில் பயன்படுத்தப்படும் மொழியும் ,சொற்களும் சீராக இருக்காது. இவையாவும் பல பிரபலமான நிறுவனங்களின் பெயரில் இருப்பதால் மக்கள் சுலபமாக ஏமாந்து விடுகின்றனர்.

மொபைலுக்கு வரும் இதுபோன்ற செய்திகளை புறக்கணிக்கவும் தொடர்பு கொண்ட எண்ணைத் தடுக்கவும் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் காவல் நிலையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.