மோசடி செய்தவர்கள் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்... மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “மத்திய வங்கிப் பிணை முறி மோசடி தொடர்பாக கடந்த காலங்களில் விசாரணைகள் இடம்பெற்றன. எனினும், இதன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாத நிலைமையே காணப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரச உடமையாக்க வேண்டும் என நான் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்வாறான குற்றங்களை தடுக்க விசேட சட்டத்திட்டங்களையும் வகுக்க வேண்டும்.

அதேநேரம், இதன் பிரதானக் குற்றவாளி இன்று வெளிநாட்டில் உள்ளார். எனவே, இவரை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது என்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.