சங்கரா மருத்துவமனைக்கு சென்று வர இலவச பேருந்து வசதி தொடக்கம்

இலவச பேருந்து வசதி... காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள சங்கரா பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து நிலையத்திலிருந்து சென்று மருத்துவம் பார்த்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி சேவையை எஸ்.பி. சண்முகப்பிரியா தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் சாலையில் கோனேரிக்குப்பத்தில் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மருத்துவமனைக்கு பலரும் வந்து திரும்பும் வகையில் இலவச பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவையை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எஸ்.பி. சண்முகப்பிரியாவும், மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதனும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

மருத்துவமனை தலைமை நிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி, மருத்துவர் பெருங்கோ, விமானப்படையிலிருந்து பணி ஓய்வு பெற்ற கமாண்டர் வி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையின் பொது மேலாளர் கண்ணொளி பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழா குறித்து சங்கரா பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் பம்மல்.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், பள்ளிக் குழந்தைகளுக்காக அடிக்கடி இலவச கண் மருத்துவம் மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அதேபோல கிராமப்புற ஏழைகளுக்காகவே இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. எனவே, மருத்துவச் சேவை பெற விரும்புவோருக்காக இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.