நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு

தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை ஜூன் மாதம் வரை வழங்கப்பட்டது. அதேபோன்று இந்த மாதமும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

ஜூலை மாதத்திற்கான இலவச அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்க ரூ.256 கோடியே 91 லட்சத்து 13ஆயிரத்து 420 ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் மாதம் வரை ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும்.

ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.