ராஜஸ்தானில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 4 மணி நேரம் தளர்வு

ராஜஸ்தான்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கொலையை அடுத்து அப்பகுதியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், உதய்பூர் நகரின் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வன்முறை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து இன்று (ஜூலை 2) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்வுகள் அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நேற்று (ஜூலை 1) ஜெகன்னாத் ரத யாத்திரை ஆயிரக்கணக்கான மக்களுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால், மாவட்ட நிர்வாகம் இத்தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.