கொரோனா வைரஸ் காரணமாக பெங்களூரில் 14 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. தற்போது அங்கு கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால், வெளி மாநிலங்கள், வெளியூர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 798 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 1,535 பேர் பெங்களூரில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். இதுவரை பெங்களூரில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது பெங்களூரு நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14 ஆம் தேதி முதல் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில முதல்மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், பெங்களூரு ரூரல் மற்றும் பெங்களூரு அர்பன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் வரும் 14 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 22 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.