தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு...முக்கிய சாலைகள் வெறிச்சோடியது!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வருகிறது. இதனால், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-வது கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்துள்ளன. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் உள்பட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் முக்கிய சாலைகளில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வந்த சில வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனால், சென்னையில் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு இன்று அமல்படுத்தப்பட்டிருப்பதால், மருத்துவ காரணங்கள் இன்றி அனாவசியமாக வெளியில் வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.