தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்காக வெளியான மகிழ்ச்சி செய்தி

தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... வரும் பண்டிகை காலத்தில், தனியார் துறையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பண்டிகை கால கடன் வழங்கும் முறையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் ஊடாக இந்த கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர், தமது நிறுவனத்தின் பிரதம அதிகாரியின் கையெழுத்துடனான விண்ணப்பத்தை, அருகிலுள்ள அரச வங்கிகளில் கையளிப்பதன் ஊடாக இந்த கடனுதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முச்சக்கரவண்டி, பாடசாலை வான்கள், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்கள், அரச வங்கிகளில் வங்கி கணக்குகளை வைத்திருக்கும் பட்சத்தில், அவர்களும் இந்த கடனுதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, குறித்த பிரிவைச் சேராதவர்கள், அரச வங்கிகளில் வங்கி கணக்குகளை வைத்திருந்தால், அவர்களும் இந்த பண்டிகை கால கடனை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஓய்வு பெற்றோர் மற்றும் சமுர்த்தி பெறுவோருக்கு, ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருடம் ஆகியவற்றை முன்னிட்டு, பண்டிகை கால கடன் அடிப்படையில் 0.625 வீத வட்டியின் கீழ் 10 மாதங்களில் செலுத்தி முடிக்கும் வகையில் இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவிற்கு அதிக வருமானத்தை பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாவும், மாதாந்தம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாவும், மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவிற்கு குறைவான வருமானத்தை பெறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாவும் கடனாக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.