உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.07 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.07 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் நெருங்கியுள்ள போதிலும் தொற்றின் வீரியம் குறைந்த பாடில்லை.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ் அங்கு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதேபோல், இந்தியாவிலும் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸ் பதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது வைரசின் 2-வது அலை மிரட்டத் தொடங்கியுள்ளது.

உலக நாடுகளின் நிம்மதியை சீர்குலைத்து வரும் கொரோனா வைரசுக்கு விரைவில் கடிவாளம் (தடுப்பூசி) போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 61 ஆயிரத்து 676 ஆக உள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 81 ஆயிரத்து 356- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 1 கோடியே 36 லட்சத்து 76 ஆயிரத்து 462- பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிக பாதிப்பு ஏற்பட்ட நாடுகள் விவரம் (கடந்த 24 மணி நேரத்தில்) அமெரிக்கா -1,01,558, பிரான்ஸ்- 38,619, இங்கிலாந்து - 20,572, ரஷ்யா - 20,498.