தமிழகத்தில் முதற்கட்டமாக 26 இடங்களில் தகைசால் பள்ளிகள் தொடங்க இருந்தாக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக தமிழகத்தில் முதற்கட்டமாக 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை தவிர மாணவர்களுக்கு புதிய அணுகுமுறையில் பாடம் நடத்த ஏதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதனையடுத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரசு அறிவித்துள்ள தகைசால் பள்ளிகள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பள்ளிகளில் அனைத்து வசதிகள் கொண்ட நூலகம் மற்றும் கடமை உணர்வோடு பணியாற்றும் நூலக ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேபோன்று விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் முன்னேற்றத்தை உருவாக்கி மனநலமும், உடல் நலமும் பேணப்படும். கலைகள், நாடகங்கள் மற்றும் இசை போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெளிப்பட்டு திறனும் வளர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டம் வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.