அரசு ஆவணங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும்- ஐகோர்ட்டில் மனு

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பழனி தச்சுத் தொழில் செய்பவர். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ் மொழிக்கு உள்ள பாரம்பரியம், தொன்மை, உலகில் உள்ள வேறு எந்த மொழிகளுக்கும் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண, இலக்கியங்கள் பல தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாடு தலைமை செயலக அலுவலகத்தில் பதிவேடுகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் என்று எல்லா ஆவணங்களும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை தமிழில் எழுதுவதே இல்லை.

சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டதை மாற்றி மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்களை பெரிதாகவும், ஆங்கில எழுத்துக்களை சிறிதாகவும் எழுத வேண்டும் என்று 1981-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். அரசின் கொள்கை முடிவின்படி, தமிழும், ஆங்கிலமும் தமிழ்நாட்டில் அலுவல் மொழியாகும்.

ஆனால், அதிகாரிகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்து ஆவணங்களையும் எழுதுகின்றனர். அரசு அனுப்பும் நோட்டீஸ், சம்மன் ஆகியவை கூட ஆங்கிலத்தில் உள்ளதால், தமிழ் மட்டும் தெரிந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. அதுபோல, மாவட்ட கோர்ட்டுகளில், சிவில் கோர்ட்டுகளில் தமிழில் ஆவணங்கள் எழுத வேண்டும். அதுமட்டுமல்ல, தமிழக டி.ஜி.பி. திரிபாதி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்து தமிழில் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர், சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். பொங்கியப்பன் ஆகியோர் இந்த மனுவுக்கு தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் மாதம் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.