பீகாரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பின வாரிசுகளுக்கு அரசு வேலை - முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினரில் யாராவது கொலை செய்யப்பட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான சட்ட விதிகளை விரைவில் உருவாக்கும்படி எஸ்சி,எஸ்டி நலத்துறை செயலாளருக்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், கொல்லப்பட்ட ஓபிசி அல்லது பொதுப்பிரிவு மக்களின் உறவினர்களுக்கு ஏன் அரசு வேலைகள் கொடுக்கக்கூடாது? முதல்வரின் அறிவிப்பு எஸ்சி, எஸ்டி பிரிவினரை கொலை செய்வதை ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் பீகார் மாநிலமும் உள்ளதாகவும். . பீகாரில் வேலையின்மை விகிதம் 46 சதவீதமாக உள்ளதாகவும், அரசின் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

மேலும் அவர், எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், எங்கள் அரசு காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்புவதுடன், மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கும் என்று கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்கான பணிகள் ஆயத்தமாகி வருகின்றன.